மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளை வலுப்படுத்தி, நகர்புற மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாடு நகர்புற மருத்துவ சுகாதாரத் திட்டம், தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு, இந்த திட்டத்தை செயல்படுத்தவதற்கு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதி உதவியைப் பெற்றுத் தருமாறு கோரி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம், மத்திய அரசு மற்றும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஆகியோரிடையே 31.03.2016 அன்று புதுடெல்லியில் கையொப்பமிடப்பட்டது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 1,634 கோடி ரூபாயாகும். இதில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை 85 விழுக்காடு 1.388 கோடி ரூபாயை கடனாக வழங்குகிறது. எஞ்சிய 15 விழுக்காடு 246 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கும். இந்த கடன் தொகைக்கான வட்டி வீதம் 0.3 விழுக்காடாகும். இந்த திட்ட செயலாக்க காலம் 7 ஆண்டுகள் ஆகும்.
இந்த திட்டத்தின் கீழ், உயர்நிலை அரசு மருத்துவமனைகளை, கூடுதல் கட்டமைப்பு வசதிகள் மற்றம் மருத்துவக் கருவிகளுடன் தரம் உயர்த்துதல், பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கி அவைகளை வலுப்படுத்துதல், இரண்டாம் நிலை மருத்துவமனைகளை கூடுதல் வசதிகள் மற்றும் மருத்துவ கருவிகளுடன் வலுப்படுத்துதல், மருத்துவமனை நிர்வாகத்தை வலுப்படுத்துதல், தொற்றா வகை நோய்கள் குறித்து முதல் நிலை சுகாதார சேவை வழங்கும் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு நகர்புற மருத்துவ கட்டமைப்பு திட்டம், 17 நகரங்களில் உள்ள 21 அரசு மருத்துவ மனைகளில் செயல்படுத்தப்படும். மதுரை, சென்னை கீழ்பாக்கம், கோயம்புத்தூர், சேலம், வேலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 14 இடங்களில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும், ஈரோடு, கடலூர் மற்றும் பெரியகுளம் ஆகிய மாவட்ட தலைமை மருத்துவ மனைகளும், சென்னை – ஆவடி, சேலம் மாவட்டம் - அம்மாபேட்டை, திருப்பூர் மாவட்டம் - வேலம்பாளையம் மற்றும் திருநெல்வேலி -கண்டிகைப்பேரி ஆகிய நான்கு இடங்களில் உள்ள இரண்டாம் நிலை மருத்துவமனைகளும் வலுப்படுத்தப்படும்.
உயர்நிலை மருத்துவமனைகளை மேம்படுத்துதல் (கட்டமைப்பு -368.20 கோடி ரூபாய் மற்றும் உபகரணங்கள் 497.41 கோடி ரூபாய்)
பரிந்துரை மருத்துவமனைகளை (Referral Hospital ) வலுப்படுத்துதல் ( உபகரணங்கள் 201.07 கோடி ரூபாய்)
இரண்டாம் நிலை மருத்துவமனைகளை வலுப்படுத்துதல் (கட்டமைப்பு 109.50 கோடி ரூபாய் மற்றும் உபகரணங்கள் 51.43 கோடி ரூபாய்)
மருத்துவமனை நிர்வாகம் வலுப்படுத்தல் - மேற்குறிப்பிட்ட 21 மருத்துவ மனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம், மருத்துவக் கருவிகள், தொற்றா நோய்கள் மற்றும் அவசரகால சிகிச்சை அளித்தல் போன்றவைகள் குறித்த பயிற்சி அளிக்க, 8.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார சேவை பயிற்சி நிலையங்களை வலுப்படுத்துதல் – சென்னை மற்றும் மதுரையில் செயல்படும் மண்டல பயிற்சி நிலையங்களில், தொற்றா நோய்களுக்காக நவீன ஆய்வகம் நிறுவப்பட்டு, ஆரம்ப சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க 2.98 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை செயல்படுத்த தமிழ்நாடு நகர்புற சுகாதாரத் திட்ட மேலாண்மை அலகு 01.06.2017 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு ஆலோசனை குழுமம் செயல்பட்டு வருகிறது. இக்குழுமத்தின் பணிகளாவது
இந்த ஆலோசனை குழுமம் மேற்குறிப்பிட்ட 7 மருத்துவமனைகளுக்கு கட்டபடவுள்ள கட்டங்களுக்கான கருத்துரு வரைபடங்கள் தயார் செய்துள்ளது. 21 மருத்துவமனைகளுக்கு வழங்கவுள்ள மருத்துவக் கருவிகளை இறுதி செய்துள்ளது.
திட்ட முன்னேற்ற நிலை - மதுரை, சென்னை கீழ்ப்பாக்கம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக நிர்வாக அனுமதி அரசு ஆணை (நிலை) எண். 576,ம.ந.(ம) கு.ந. (அ.உ.தி2.1), நாள்.30.12.2019) பெறப்பட்டுள்ளது. இந்த மூன்று அரசு மருத்துவமனைகளில் கட்டடங்கள் கட்ட 08.02.2021 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு கட்டட பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்த மூன்று மருத்துவமனைகளுக்கான நவீன உயர் மருத்துவக் கருவிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை ஆவடி, சேலம்- அம்மாபேட்டை, திருப்பூர் – வேலம்பாளையம் மற்றும் திருநெல்வேலி – கண்டியப்பேரி ஆகிய இடங்களில் உள்ள இரண்டாம் நிலை அரசு மருத்துவமனைகளக்கு கட்டிடங்கள் கட்டுவதற்காக நிர்வாக மற்றம் நிதி அனுமதி அரசு ஆணை (நிலை) எண்.80, ம.ந. (ம) கு.ந (அ.உ.தி.2/1), நாள்.05.03.2020) பெறப்பட்டுள்ளது. இந்த நான்கு அரசு மருத்துவமனைகளில் கட்டடங்கள் கட்ட 23.02.2021 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு கட்டட பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்த நான்கு மருத்துவமனைகளுக்கான நவீன உயர் மருத்துவக் கருவிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் ஒப்புதலுக்கு அனுப்பட்டுள்ளது.
கட்டடங்கள் வழங்கப்படாத 14 மருத்துவமனைகளுக்கும் உயர் நவீன உயர் மருத்துவக் கருவிகள் வழங்குவதற்கு நிர்வாக அனுமதி அரசு ஆணை (நிலை) எண்.483, ம.ந.(ம)கு.ந. (அ.உ.தி.2/1) நாள். 22.10.2019) பெறப்பட்டுள்ளது. அதன்படி நவீன உயர் மருத்துவக் கருவிகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் வாயிலாக கொள்முதல் செய்யப்பட்டு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 980 கருவிகளில் 952 கருவிகளுக்கு கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் 788 கருவிகள் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள கருவிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
நகர்புற சுகாதார வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட்டு, நகர்புற ஏழை எளிய மக்கள் குறிப்பாக குடிசை வாழ் மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக தரமான மருத்துவ சிகிச்சை வசதிகள் இலவசமாக கிடைக்கும்.